Thursday, September 3, 2009

சங்கத்தமிழ் காதல்

தீபன் சக்கரவர்த்தி/ உமா ரமணன் பாடிய ஒரு பாடல் "பூங்கதவே தாழ் திறவாய்" :)...ஒரு அற்புதமான காதல் கவிதை. நான் காதல் மேல் காதல் கொண்டது இந்த இசையை கேட்டுத்தான். இளையராஜா ஒரு தலைமுறையின் காதலுக்கே இலக்கணம் எழுதிய காலம் அது. நான் சிறு பிள்ளையாய் இருந்தாலும் என் தலைமுறை இளைஞர்களிடம் அவரின் எண்பதுகளின் இசை ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்களின் பள்ளி கல்லூரி காலங்களையும் அவரின் 80களின் இசை வசப்படுத்தியது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தொன்னூறுகளில் வந்த அவரின் இசை எனக்கு அவ்வளவு பிடிக்காது, ஒரு சில பாடல்களை தவிர. ARRரின் இசையும் இக்காலகட்டத்தில் எல்லோரையும் வசப்படுத்த தொடங்கி இருந்தது ஒரு காரணம்.
பூங்கதவே தாழ் திறவாய் தவிர இன்னொரு பாடலையும் தீபன்/உமா பாடியிருக்கிறார்கள். "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு", மிக அற்புதமான கவனிக்கப்படாத பாடல். :)...பாடல் எழுதியவரின் கற்பனை அபாரம். அக்கா இந்த பாடலை எனக்கு பதிவு செய்து அனுப்பி இருந்தாள். தேங்க்ஸ் அக்கா. இந்த பாடல் ஆரம்பிக்கும் முன்னே ஒரு விருத்தம் வரும். தூங்கிக் கொண்டிருக்கும் கணவனை மனைவி எழுப்ப பின் வரும் விருத்தத்தை பாடுவாள் :)

கூவின பூங்குயில்...கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்
யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

http://www.youtube.com/watch?v=iCdkj4jlygA

மாணிக்கவாசகர் சிவனை எழுப்ப இயம்பின வரிகள் :), ஒரு பெண் தன கணவனை எழுப்ப பாடுவது, அற்புதமான கற்பனை. இது கண்டிப்பாய் ராஜாவின் ரசனையாய் இருக்கும் எனபது என் யூகம். இந்த ரசனையில் மெல்லியதாய் நம் கலாச்சாரத்தின் nuances தெரியும். நான் சமீபத்தில் ரமண மகரிஷியின் பக்தர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, "கணவனுக்கும் மனைவிக்குமான உறவு கடவுளுக்கும் பக்தனுக்குமான உறவைப் போன்றது, எப்படி பின்னது வெறும் பேரம் பேசும் உறவாய் திரிந்து போய்விட்டதோ முன்னதும் வெறும் வாழ்வியலுக்கான அவசியமாய் போய்விட்டது" என்றார். :) சத்தியமான வார்த்தைகள்.

இந்த பாடல் மற்றுமொரு இலக்கிய படைப்பை நினைவுப்படுத்துகிறது. :)..நான் பள்ளியில் இருக்கும் போது தமிழ் பாட நூலில் வந்தது. சங்க இலக்கியமான அகநானூரில் இருக்கும் குறுந்தொகையில் வரும் என்று நினைக்கிறேன். அப்பாடல் எனக்கு மறந்து போய் விட்டாலும் அப்பாடலின் பொருள் நினைவிருக்கின்றது.

"காந்தள் மலரையொத்த தன் மெல்லிய விரல்களால் தலைவி தன் கணவனுக்கான குழம்பையும் சோறையும் தயாரிக்கின்றாள். அப்போது புகையின் காரணமாய் அவள் கண்களை கசக்கி கொள்ள, கண்கள் சிவக்கின்றன. செவ்வரி ஓடிய கண்களைக் கொண்ட தலைவி தலைவனுக்கு உணவை பரிமாறும் போது தலைவன் தலைவியின் மேல் கொண்ட காதலினால் நன்று நன்று என சொல்லிக்கொண்டே சாப்பிடுகிறான்". :)

இப்பாடலை சொல்லிக்கொடுத்த எங்கள் தமிழ் ஆசிரியை எங்களுடன் அமர்ந்திருந்த மாணவர்களை பார்த்து "டேய் அப்படி இப்படி இருந்தாலும் சமத்தா சாப்பிடனும் புரியுதா, கல்யாணம் ஆனப்புறம் இந்த பாடலை நினைச்சுக்கோங்க" . எல்லோரும் கொள்ளன சிரித்தோம். திரும்பி என் வகுப்பு மாணவர்களின் முகங்களை பார்த்த பொழுது சிலர் வெட்கப் புன்னகையும், சிலர் கற்பனைப் புன்னகையும் உதிர்த்தது மறக்க முடியாது. அதில் ஒரு காதல் புன்னகையும் இருந்ததை கவனித்து விட்டேன். அப்போதே காதலித்துக்கொண்டிருந்த செந்தில் என்ற மாணவனும் குழலி என்ற மாணவியும் ஒருவரை ஒருவர் பார்த்ததை நான் பார்த்து விட்டேன். :)..இப்போது அவர்கள் திருமணம் செய்துக்கொண்டு ஒரு குட்டிப் பெண்ணிற்கு பெற்றோர்கள். எங்கோ ஓரிடத்தில் சங்கத்தமிழ் காதல் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது . :)

(தமிழ்ப் பாடம் மற்றும் இலக்கியம் பள்ளிகளில் ஏன் முக்கியம் என்பதை விளக்க இஷா வித்யா ஆசிரியர்களிடம் ஒருமுறை இவ்வனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். எல்லோரும் பெண்கலானதால் மிகவும் சுவாரஸ்யமாய் கேட்டார்கள். :)

4 comments:

Thekkikattan|தெகா said...

ஹ்ம்ம்ம்... தமிழிலும் வெளுத்து வாங்கிறீங்களே, நன்றோ நன்று :)!

//"டேய் அப்படி இப்படி இருந்தாலும் சமத்தா சாப்பிடனும் புரியுதா, கல்யாணம் ஆனப்புறம் இந்த பாடலை நினைச்சுக்கோங்க"//

:)) இதுக்குப் பேருதான் வாழ்க்கைக் கல்வியோ? அவசியம் வலியுறுத்துங்க இஷா பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுவையா சொல்லி இருக்கீங்க :)

Rams said...

Waare waah... Raji... superaa irundhadhu... it was very interesting to read thru the whole post :)

Anonymous said...

Nice similes to co-relate the memories!