Saturday, January 5, 2013

யாருக்காக?

ஒரு பூ யாருக்காகவும் மலர்வதில்லை, எங்கோ காட்டில் ஒரு மூலையில் மலர்ந்தாலும் அல்லது பல பேர் கூடும் தோட்டத்தில் அது மலர்ந்தாலும் அதற்கு ஒன்று தான். அதன் மிகப் பெரிய தோல்வி, மலர முடியாமல் போவது. நம் வாழ்வின் மிகப்பெரிய தோல்வியும், மலர முடியாமல் போவது தான். இது வேண்டும் இந்த இலக்கை தொட வேண்டும், பல பேர் நம்மை பாராட்ட வேண்டும் , இந்த பதவியை அடைய வேண்டும், என்ற ஆவலை விடுத்தது மலர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் நாம் செயல் பட்டோம் என்றால்....கிடைத்துவிடும்...அத்தனையும். அந்த தருணத்தின் மிகப்பெரிய அழகு, கிடைக்கும் யாவுமே நமக்குமே தேவை இல்லாது போவதுதான். மலர்வது என்பது ஒரு செயல் மட்டும் இல்லை, ஒரு தன்மையும் கூட.. சே குவாராவின் எண்ணங்கள் சிலவற்றை படிக்க நேர்ந்தது .....அவர் தேர்ந்தெடுத்த பாதை எனக்கு கொஞ்சமும் பரிட்சயம் இல்லாதது ...பல பேரை கொன்று தன் அன்பைச் சொன்னவர். கொல்வதிர்க்கும் அன்பிற்கும் என்ன சம்பந்தம் என்று பல முறை நான் நினைத்ததுண்டு. அதை அவரின் எழுத்தை படிக்க நேர்ந்தபோது புரிந்தது...அவர் போர் புரிந்து கொன்றவர் மீது சிறிதும் வெறுப்பு காட்டி இருக்க மாட்டார். நிச்சயம், அவரின் எழுத்தில் அவரே அர்ஜுனன் அவரே கிருஷ்ணனும் கூட. அவரின் செயல்கள் அவரை முழுமையாய் மலர வைத்ததால் தான், இறந்த பொழுதும் அதற்கப்புறமும் கூட அவரின் முகம் புன்னகை பூத்தது... ஒரு பூ மலர்வது யாருக்காகவும் அல்ல, யார் அதை ரசிதார்களோ அவரே அதை கசக்கவும் கூடும். சேவின் வாழ்க்கையில் அதுவும் நடந்தது , ஆனால் அவர் மலர்வதையோ அல்லது மணம் பரப்புவதையோ நிறுத்தவில்லை. ஒரு பூ தனக்காக கூட மலர்வது இல்லை....